உன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு கல்லறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிக்கப்பட்ட பெண்ணின் சமாதி
எரிக்கப்பட்ட பெண்ணின் சமாதி
Published on

உன்னாவ்:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டார். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

வழக்கு விசாரணைக்காக, கடந்த 5ம் தேதி அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டு செல்லும் வழியில், குற்றம்சாட்டப்பட்ட சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து, அப்பெண்ணை  தீ வைத்து  எரித்தனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், மறுநாள்  உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்த இளம்பெண்ணின் உடல் அவர் பிறந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தாத்தா, பாட்டி கல்லறைகளுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் அடக்கத்தின்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மண்ணால் மூடப்பட்ட அந்தப் பெண்ணின் சமாதியை சிமெண்ட் பூசி மூடுவதற்கு வந்த உன்னாவ் மாவட்ட அரசு அதிகாரிகளை எதிர்த்து அப்பெண்ணின் குடும்பத்தார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

‘குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை சமாதி கட்ட விடமாட்டோம் என அப்பெண்ணின் குடும்பத்தார் கோஷமிட்டனர். அவர்களின் போராட்டத்தினால் சமாதி கட்டும் பணி நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மூலம் கல்லறை கட்டுவதற்கு வைத்த செங்கல்களையும் உடைத்தெறிந்தனர்’, என போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது சகோதரி வழக்கில் விரைவாக நீதி கிடைக்காவிட்டால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும் அச்சுறுத்தினார். 

மருத்துவமனையில் உள்ள அவருக்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com