உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் கைது

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார் அலகாபாத் கோர்ட் உத்தரவின்படி இன்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். #Unnao #KuldeepSinghSengar
உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் கைது
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார். 

இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். 

இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உ.பி,. முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரிக்க முன்வந்தது.

அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.பி.போஸ்லே தலைமையிலான அமர்வின் முன்னர் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வை கைது செய்யும் நோக்கம் இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இன்றும் தொடர்ந்த இவ்வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் ஆஜாரான தலைமை வழக்கறிஞர், தெரிவித்தார்.

இந்த பதிலால் ஆத்திரம் அடைந்த நீதிபதிகள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிம்ஹ் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணால் கடந்த 20-6-2017 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும், இதர புகார்களின்படியும் இவ்வழக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் தொடர்புடைய நபர்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினும் ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ இன்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். #tamilnews #Unnao #KuldeepSinghSengar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com