உ.பி. பெண் கற்பழிப்பு- தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது அலகாபாத் ஐகோர்ட்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் மீது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. #UnnaoRapeCase #allahabadhighcourt
உ.பி. பெண் கற்பழிப்பு- தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது அலகாபாத் ஐகோர்ட்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தார்.

உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கின் உடல்நிலை கடந்த 10-ம் தேதி இரவு திடீரென்று மோசம் அடைந்ததால் உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ம் தேதி அவர் உயிரிழந்தார். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சுரேந்திரா சிங் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையில், கற்பழிப்பு வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முதல்வருக்கு அனுப்பி கடிதத்தின் அடிப்படையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் டிபி போஸ்லே தலைமையிலான அமர்வு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கற்பழிப்பு வழக்கு குறித்து மாநில அரசு உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக அரசு வழக்கறிஞர் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும். விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங்கின் உடலை தகனம் செய்யாமல் பதப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #UnnaoRapeCase #allahabadhighcourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com