உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை உடனடியாக கைது செய்ய அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை உடனடியாக கைது செய்ய அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரிக்க முன்வந்தது.


அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.பி.போஸ்லே தலைமையிலான அமர்வின் முன்னர் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வை கைது செய்யும் நோக்கம் இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இன்றும் தொடர்ந்த இவ்வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் ஆஜாரான தலைமை வழக்கறிஞர், தெரிவித்தார்.

இந்த பதிலால் ஆத்திரம் அடைந்த நீதிபதிகள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிம்ஹ் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com