உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கு- குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை

உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குல்தீப் சிங் செங்கார்
குல்தீப் சிங் செங்கார்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணும், உறவினர்கள் சிலரும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக காரில் சென்ற போது இவர்களது கார் மீது லாரி மோதியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் அவருடன் இருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக கண்காணித்ததோடு, சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதன்படி உன்னாவ் பெண் கற்பழிப்பு வழக்கு, விபத்து வழக்கு உள்பட 5 வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.

டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற இந்த வழக்கில் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை வெளியூர் சென்று விட்டு மாசி கிராமத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த சசிபிரதாப் சிங் என்பவரிடம் தங்களை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சசி பிரதாப் சிங் தனது நண்பரும், குல்தீப் செங்காரின் தம்பியுமான அதுல்சிங் செங்காரை வரவழைத்தார். அங்கு வந்த அதுல் சிங், இளம்பெண்ணின் தந்தையை தாக்கினார்.

பின்னர் அங்கு வந்த போலீசார் பெண்ணின் தந்தையை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் காவலில் இருந்த போது அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார், அதுல்சிங் செங்கார் உள்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் செங்கார் குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தொடர்ந்து இந்த வழக்கில் இன்று செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரவும் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்காருக்கு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com