

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.
அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் சென்று வர கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்தது. தினமும் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு ஐ.நா. சபை தலைவர் அண்டோனியோ குட்டரஸ் இன்று சென்று பார்வையிட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குருத்வாராவின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த குட்டரஸ், அங்கு வந்திருந்த சீக்கியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உணவு பரிமாறினார். மேலும், கர்த்தார்பூர் பாதை ஏற்படுத்த ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஐ.நா.சபை தலைவரின் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.