

உளுந்தூர்பேட்டை:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 35). இவர் தனது உறவினர்களுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த காரை சென்னை ராமாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாதன் (33) என்பவர் ஓட்டிச்சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை தனியார் பள்ளி அருகில் கார் வந்த போது எதிரே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற மற்றொரு கார் மீது கண்இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார் டிரைவர் மஞ்சுநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் 2 காரிலும் வந்த பிரசாந்த், நந்தா, கதிர்வேல், கஸ்தூரி, சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேதுராமன், இவருடைய மனைவி சுமதி உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.