உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் மோதல்- 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

உளுந்தூர்பேட்டை:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்னைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 30) ஓட்டி வந்தார். பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர்.

இன்று அதிகாலை அந்த பஸ் உளுந்தூர்பேட்டை பாலி போலீஸ் சிறப்பு காவல்படை எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ் மீது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து வந்த மற்றொரு தனியார் ஆம்னி பஸ் திடீரென பின்னால் மோதியது. இதில் 2 ஆம்னி பஸ்களும் நிலைதடுமாறி அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன.

களியக்காவிளையில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வெங்கடேஷ், அவரது மனைவி ராணி, திருநெல்வேலியை சேர்ந்த சாலி, மதுரை ஜியா, டிரைவர் முருகன் உள்பட 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடன்குடியில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் கவிழ்ந்த 2 ஆம்னி பஸ்களும் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com