உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- 3 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே இன்று மதியம் தனியார் பஸ் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த மல்லிகா - நிஷா
விபத்தில் இறந்த மல்லிகா - நிஷா
Published on

உளுந்தூர்பேட்டை:

திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 71). இவரது மகள் நிஷா (32).

மல்லிகா குடும்பத்தோடு மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதனை தொடர்ந்து மல்லிகா அவரது மகள் நிஷா மற்றும் 2 குழந்தைகள் உள்பட 5பேர் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் சாமிதரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் அந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிபாளையம் என்ற கிராமத்தில் வந்துகொண்டிருந்தது.

அப்போது காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது.

அப்போது விருத்தாசலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

டயர் வெடித்து தாறுமாறாக ஓடியகார் எதிர்திசையில் வந்த தனியார் பஸ்மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. அதுபோல் பஸ்சும் கவிழ்ந்தது.

பஸ்கவிழ்ந்ததால் உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினார்கள். இந்த விபத்தில் காரில் இருந்த மல்லிகா அவரது மகள் நிஷா மற்றும் கார்டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்கள்.

மேலும் காரில் இருந்த 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 2 குழந்தைகளை மீட்டனர்.

அவர்களை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ்மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அந்த 2 குழந்தைகளின் நிலமை மோசமாக உள்ளது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com