

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து அசோவ் கடற்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.