இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்க்கும் விஜய் மல்லையா வழக்கு: லண்டன் ஐகோர்ட் ஜூலை 2-ம் தேதி விசாரணை

9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் ஜூலை 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya #Mallyaextradition #UKHighCourt
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்க்கும் விஜய் மல்லையா வழக்கு: லண்டன் ஐகோர்ட் ஜூலை 2-ம் தேதி விசாரணை
Published on

லண்டன்:

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஒருவாரத்துக்குள் எழுத்து மூலமாக அவர் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அவ்வகையில் அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது ஜூலை மாதம் 2-ம் தேதி விரிவான விசாரணை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர்களும், இந்திய அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பிரிவும் (கிரவுன் பிராசிக்கியூஷன் சர்வீஸ்) வாதாடுவார்கள். மல்லையாவின் கோரிக்கை இங்கு ஏற்கப்பட்டால் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக அவர் லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யலாம்.

அல்லது, அவரது கோரிக்கை லண்டன் ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டால் அவரால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடியாது. மாறாக, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்னும் கோணத்தில் பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை விஜய் மல்லையா நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #VijayMallya #Mallyaextradition #UKHighCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com