விஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு

இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #VijayMallya
விஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு
Published on

லண்டன்:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், கடந்த மாதம் 8-ந் தேதி, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டார். விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரும் வழக்கின் இறுதி விசாரணைக்காக, அவர் அடுத்த மாதம் 31-ந் தேதி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகிறார். #VijayMallya

X

Maalai Malar
www.maalaimalar.com