காதல் திருமணம் செய்தவர்களுக்காக போராடுவேன் - உடுமலை சங்கர் மனைவி பேச்சு

தனி சட்டம் கொண்டு வர வேண்டும் காதல் திருமணம் செய்தவர்களுக்காக போராடுவேன் உடுமலை சங்கர் மனைவி பேச்சு கோவை-04
உடுமலை சங்கர் அறக்கட்டளை தொடக்க விழாவில் கவுசல்யா பேசிய காட்சி.
உடுமலை சங்கர் அறக்கட்டளை தொடக்க விழாவில் கவுசல்யா பேசிய காட்சி.
Published on

உடுமலை:

காதல் திருமணம் செய்தவர்களுக்காக போராடுவேன் என உடுமலை சங்கர் மனைவி ‘சங்கர் சமூக நீதி அறக்கட்டளை’ தொடக்க விழாவில் பேசினார்.

உடுமலையை சேர்ந்த சங்கர் கடந்த 2016-ம் ஆண்டு கவுரவ கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார். கொலை செய்யப்பட்ட சங்கரின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கவுசல்யா தனது கணவர் சங்கர் பெயரில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு,ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் எட்வின்ஸ் கதிர், மே 17 இயக்க திருமுருகன் காந்தி, பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், டைரக்டர் சமுத்திரக்கனி, கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை தொடக்க விழாவில் சங்கர் மனைவி கவுசல்யா பேசியதாவது-

சங்கர் கொலை போல் இனி ஆணவ கொலை நடக்கக்கூடாது. காதல் திருமணம் செய்தவர்களுக்காக நான் போராடுவேன். காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஆணவ கொலையை தடுத்து நிறுத்த போராடுவேன். சங்கர் சமூக நீதி அறக்கட்டைள மூலம் குழந்தைகளுக்கு தப்பாட்ட பயிற்சி அளிப்பேன்.

படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்கரின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி குமரலிங்கத்தில் உள்ள சங்கர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது சங்கரின் தந்தை வேலுச்சாமி நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தார்.

சங்கர் மனைவி கவுசல்யா சிறுவர்களுக்கு பறையடிக்கும் பயிற்சி அளித்தார். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மடத்துக்குளம் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி, விடுதலை சிறுத்தைகள்,ஆதித் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சங்கர் நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைக்க முயன்றனர்.

அதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி ஊர்வலமாக சென்ற அவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனால் பரபரப்பு உருவானது. சங்கர் நினைவு நாளையொட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com