

பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா மற்றும் உடுமலைப்பேட்டை கொமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் ஆகிய 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 13.3.2016-ந் தேதி உடுலைப்பேட்டை பஸ் நிலையம் அருகே சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
மனைவி கண் முன்னே கவுசல்யாவின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திய இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் வெளியான இந்த காட்சிகள் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரை கவுசல்யா திருமணம் செய்ததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத கவுசல்யாவின் குடும்பத்தினர் இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மைக்கேல் என்ற மதன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல் குற்றவாளியான சின்னச்சாமியின் தாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்ததை அடுத்து தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அவர் 3 நாள் அனுமதி கேட்டிருந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சின்னச்சாமிக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்து கோவை சிறைக்கு செல்லும் வரை பகல் நேரத்தில் வீட்டிலும், இரவு நேரத்தில் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் தங்க வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.