U19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்தியா சாம்பியன்

U19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்தியா சாம்பியன்

நியூசிலாந்தில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. #AUSvIND #U19CWCFinal
Published on

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டி மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி 6:30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜோனாதன் மெர்லோ 76 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் போரெல், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிவம் மாவி ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிரித்வி ஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மன்ஜோத் கல்ரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா 4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிக்கு செல்லுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. நல்லவேளையாக மழை உடனடியாக நின்றது.

தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இந்தியா 8.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 11-வது ஓவரை எட்வர்ட்ஜ் வீசினார். இந்த ஓவரில் மன்ஜோத் கல்ரா மூன்று பவுண்டரிகள் விளாசினார். 12-வது ஓவரை சதர்லேண்டு வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார். பிரித்வி ஷா 41 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட் ஜோடி 11.4 ஓவர்களில் 71 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

2-வது விக்கெட்டுக்கு மன்ஜோத் கல்ரா உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 15.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

17-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார் மன்ஜோத் கல்ரா. அவர் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 131 ரன்னாக இருக்கும்போது ஷுப்மான் கில் 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷுப்மான் கில் அவுட்டாகும்போது இந்தியா 86 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. இந்த தொடர் முழுவதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காததால் எப்படி விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மன்ஜோத் கல்ரா சதத்தை நோக்கிச் சென்றார்.

இந்தியா இலக்கை நெருங்க நெருங்க மன்ஜோத் கல்ரா சதம் அடிப்பரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்தியாவின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவை என்றபோது மன்ஜோத் கல்ரா 99 ரன்னில் இருந்தார். 39-வது ஓவரை சதர்லேண்டு வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் மன்ஜோத் கல்ரா. அவர் 101 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார்.

39-வது ஓவரின் 5-வது பந்தை ஹர்விக் தேசாய் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 38.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹார்விக் தேசாய் 61 பந்தில் 5 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தும், மன்ஜோத் கல்ரா 102 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com