ஆம்பூர் அருகே இளம்பெண் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டாவை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த வாலிபருடன் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்நத மகேஷ் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் கணவருடன் செல்போனில் பேசுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

உமராபாத் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

ரேவதியின் செல்போனில் கடைசியாக யார்? யார்? பேசினர் என ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் ரேவதியிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு 2 வாலிபர்களையும் உமராபாத் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com