குன்றத்தூர் அருகே செம்மரக்கட்டை கடத்தல்: கார் விபத்தில் சிக்கியதால் வாலிபர்கள் ஓட்டம்

குன்றத்தூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை கடத்தி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் இரண்டு வாலிபர்கள் தப்பியோடினர்.
குன்றத்தூர் அருகே செம்மரக்கட்டை கடத்தல்: கார் விபத்தில் சிக்கியதால் வாலிபர்கள் ஓட்டம்
Published on

பூந்தமல்லி:

பொன்னேரியை சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று இரவு குன்றத்தூரை அடுத்த கோவூர், தாம்பரம்-மதுர வாயல் பைபாஸ் சாலையில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது சாலையில் பழுதாகி நின்ற கார் மீது பிரபுவின் கார் மோதியது. இதையடுத்து காரில் இருந்த 2 வாலிபர்களுடன் பிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விரைந்து வந்து வாலிபர்கள் விட்டுச் சென்ற காரை சோதனை செய்தபோது அதில் இருந்த சிமெண்ட் மூட்டைகளுக்கு கீழ் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

காரின்பதிவு எண்ணை சோதனை செய்தபோது அது போலியானது என்பது தெரிந்தது. அந்த கார் ஆந்திர மாநில பதிவுஎண் கொண்டதாக இருந்தது. தப்பி ஓடிய 2 வாலிபர்களும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. கார் விபத்தில் சிக்கியதால் அவர்கள் தப்பி ஒடிவிட்டனர்.

செம்மரக் கட்டைகளுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com