பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
Published on

தர்மபுரி:

தர்மபுரி டவுன் பஸ்நிலையத்திற்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். பஸ்நிலையத்தின் உள்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வண்டிகளை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வந்தனர். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் டவுன் பஸ்நிலையத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு காரணமாக டவுன் பஸ்களை உரிய இடத்தில் நிறுத்துவதிலும், மீண்டும் பஸ்களை எடுப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் தடையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தர்மபுரி போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருணாச்சலம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தர்மபுரி டவுன் பஸ்நிலையம், புறநகர் பஸ்நிலையம் மற்றும் சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com