

ஓ.பி.எஸ். தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதில் அதிகாரப்பகிர்வு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது. நேற்று அதில் உடன்பாடு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழி நடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர்.
இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிடமும் இத்தகைய ஒருமித்த கருத்து உருவானதும் இன்று அணிகள் இணைப்பை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி அறிவித்தனர். ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.