

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் அக்ரகாரத்தில் வசிப்பவர் கலிய மூர்த்தி மகன் கார்த்தி (வயது 38). இவர் உமையாள்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தோப்பில் வெள்ளைப்பன்றிகள் வளர்த்து வருகிறார்.
இந்த தோப்பில் மர்ம ஆசாமிகள் தங்கி ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தஞ்சை மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் கண்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாசம், தலைமை காவலர்கள் மோகன், சண்முகம், சிவகுமார், இளையராஜா, அருண், அழகு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று அந்த தோப்பில் திடீரென புகுந்து சோதனை செய்தனர்.
சோதனையில் தோப்பில் அரிவாள், கத்தி, உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் நாட்டு சனல் வெடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதை வைத்திருந்ததாக அங்கு இருந்த கார்த்தி, உமையாள்புரம் அக்ரகாரத்தில் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால சோழன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கார்த்தி என்பவர் கபிஸ்தலம் பங்களா தெரு ஆறுமுகம் மகன் முருகேந்திரன் (வயது 28) ஆட்டோ ஓட்டி வந்தவரை வழிமறித்து அடித்து உதைத்து வழிப்பறி செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஆட்டோவை உடைத்து இருப்பதாக அவர் மீது கபிஸ்தலம் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.