ஆடுகளைத் திருடி சினிமா தயாரித்த 2 நடிகர்கள் கைது

மாதவரத்தில் தொடர்ந்து ஆடுகளை திருடி வந்த பணத்தின் மூலம் சொந்தமாக படம் தயாரித்து நடித்து வந்த 2 நடிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

செங்குன்றம்:

மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கார் மற்றும் மினி வேனில்வந்த மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த ஆடுகளின் உரிமையாளர் மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் அளித்த அடையாளங்களை வைத்து மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய 2 பேரை கைது செய்தார். விசாரணையில், அவர்கள் சினிமா படதயாரிப்பாளரான சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2-வது தெருவைச் சேர்ந்த விஜய சங்கர் என்பவரின் மகன்களான நிரஞ்சன் குமார் (வயது 36), லெனின்குமார் (32) என்பது தெரியவந்தது. சகோதர்களான இருவரும் ‘நீதான் ராஜா’ என்ற சினிமா படத்தில் கதாநாயகர்களாக நடித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட இருவரும், போலீசாரிடம் விசாரணையில் கூறியதாவது:-

நாங்கள் இருவரும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பட வாய்ப்புகளை தேடி அலைந்தோம்.பட வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்தோம். இதனால் கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை திருடி சென்னை பெரம்பூரில் விற்று அதில் வந்த பணத்தை தனது தந்தை விஜயசங்கர் இடம் கொடுத்து வந்தோம். அவர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து நாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்தார்.

அதன்பேரில் அந்த படத்திற்கு ‘நீதான் ராஜா’ என்ற பெயர் சூட்டி தற்போது படம் எடுத்து வருகிறோம். ஆடுகளை திருடுவதற்காக சொந்தமாக மினிவேன் வாங்கினோம். இந்த ஆடு திருடும் தொழிலை கடந்த மூன்று வருடங்களாக செய்துவந்த நிலையில், தற்போது சிக்கிக் கொண்டோம்’ என போலீசாரிடம் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com