

திருநெல்வேலி:
தமிழ் நாடு பிரீமியர் லீக் போட்டியின் 18-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியின் இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் வீரன்ஸ் மற்றும் டியூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
திருவள்ளூர் அணியில் சஞ்சய் யாதவ் மற்றும் என்.எஸ். சதுர்வேத் துவக்க வீரர்களாக களமிறங்கினர். என்.எஸ். சதுர்வேத் 4 ரன்னில் ஆட்டமிழக்க, திருவள்ளூர் அணிக்கு துவக்கவமே தடுமாற்றமாக அமைந்தது. மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய எஸ். சித்தார்த் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பாபா அபரஜித் மற்றும் சஞ்சய் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க வீரரான சஞ்சய் யாதவ் 50 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 61 ரன்களை குவித்தார். பாபா அபரஜித் 38 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 58 ரன்களை குவித்தார்.
இருவரின் அதிரடியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஸ்கோர் அதிகரித்தது. 20 ஓவர்களின் முடிவில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. டியூட்டி பேட்ரியாட்ஸ் சார்பில் கனேஷ் மூர்த்தி இரண்டு விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் சும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டியூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் கௌஷிக் காந்தி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் ஏழு பவுண்டரிகளை விளாசி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களை குவித்து ராகுல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சந்தோஷ் ஷிவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அரிந்த் 23 ரன்களையும்ஸ சுப்ரமணியன் ஆனந்த் 19 ரன்களை குவித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த நிலையில் மற்றொரு துவக்க வீரரான கௌஷிக் காந்தி 42 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
டியூட்டி பேட்ரியாட்ஸ் அணி 19.1 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 171 ரன்களை குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.