சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்: தினகரன்

சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்: தினகரன்
Published on

அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்று நான் மட்டும் அல்ல. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கூறி இருக்கிறார்கள். இந்த சோதனைக்கு நான் பயப்படவில்லை. தொண்டர்களுக்கும், கழகத்தை வழிநடத்தும் நிர்வாகிகளுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் நாங்கள். எந்த சோதனை வந்தாலும் இயக்கத்தை காப்பதற்காக முழு தைரியத்துடன் எதிர்த்து நின்று வெற்றிபெறுவோம்.

அ.தி.மு.க. தொடங்கும் போது எனக்கு 8 வயதுதான். ஆனால் 22 வயதில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சி பொறுப்பேற்றதில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். கட்சியின் சட்டவிதிகள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக 1989-ல் அ.தி.மு.க. இரண்டுபட்டு மீண்டும் ஒன்றானது. அப்போது தேர்தல் ஆணையத்தில் வழக்கு நடந்தபோது, வழக்கில் வாதாடியவர்களுக்கு உதவியாக இருந்தேன். அது வைத்தியலிங்கத்துக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை. இதனை பெரிதுபடுத்த வேண்டாம்.

புதுச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களில் கவர்னர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசாங்கத்தை சேர்ந்த முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குதான் அதிகாரம் உள்ளது. நாங்கள் மத்திய அரசை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோமா என்பது எங்கள் தொண்டர்களுக்கு தெரியும். உறுதி என்பது வார்த்தையில் இல்லை. மனதில்தான் இருக்கிறது.

கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உள்ளனர். மரியாதை நிமித்தம் என்பது வேறு, அவர்களோடு கைகோர்ப்பது வேறு, சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்கள் தொடர்புகள் மூலம் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். இதுபோன்ற சோதனை நடத்தினால் எம்.எல்.ஏ.க்கள் பயந்து அமைதியாக இருந்து விடுவோம் என்ற அரசியல் சதிதான் இது. இந்த சதியை எல்லாம் முறியடித்து, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்.

சிலீப்பர் செல்கள் வெளியில் வர வேண்டிய நேரத்தில் வருவார்கள். ரேசன் கடைகளில் உளுந்து நிறுத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில காலங்களில் ரேசன் கடையே இருக்காது.

மின் மீட்டர்களில் முறைகேடு நடந்து உள்ளது. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை நாங்கள் எதிர்ப்பதால் எங்கள் மீது இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது. பல்வேறு வழக்குகளும் போடப்பட்டு உள்ளன. அடக்குமுறையை ஏவி எங்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற அடக்குமுறைகளை ஏவ, ஏவ எங்கள் தொண்டர்கள் கடல் அலைபோன்று எழுச்சி பெற்று வருகிறார்கள்.

எங்களிடம் ஆட்சி அதிகாரம் இல்லை. பணபலம் இல்லை. எங்களது ஒரே பலம் தொண்டர்கள் பலம்தான். கழகத்தின் ஆணிவேராக இருக்கும் தொண்டர்கள்தான் மக்கள் மத்தியில் எங்கள் செல்வாக்கை உருவாக்கி வருகின்றனர். இந்த தொண்டர்கள் சக்தி எங்களுக்கு கிடைத்ததால்தான் தினமும் ஒரு சதி செய்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை பொறுத்தவரை பயனாளிகள் வருகிறார்கள். அவர்கள் சீக்கிரமாக சென்று விடுவதால், முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் நாற்காலிகளுடன் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கி இருப்பது நல்லதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com