டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல: டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினரே இல்லை என டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல: டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு
Published on

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான “இரட்டை இலை” சின்னத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் உரிமை கொண்டாடினார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய தலைமை தேர்தல் கமி‌ஷன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்று அறிவித்தது. அதோடு இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கியது.

அ.தி.மு.க. ஆட்சியும், இரட்டை இலை சின்னமும் தனக்கு கிடைக்காததால் டி.டி.வி.தினகரன் அதிருப்தி அடைந்துள்ளார். கட்சியும், சின்னமும் இருந்தால்தான் அரசியலில் நிலை கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் கமி‌ஷன் முடிவை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. தேர்தல் ஆணையம் நாங்கள் வழங்கிய ஆவணங்களை ஏற்றுக் கொண்டு எங்களை அங்கீகரித்துள்ளது. அதனால்தான் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் எங்களுக்கு ஒதுக்கி உள்ளது.

டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை உரிமை கொண்டாட எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. ஏனெனில் அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினரே இல்லை.

மேலும் டி.டி.வி.தினகரன் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். எனவே இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com