

புதுடெல்லி:
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை தங்கள் அணிக்கு தற்காலிகமாக ஒரு பெயரையும், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட ‘குக்கர்’ சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்குதல், கட்சி பெயரை அனுமதித்தல் ஆகிய பணிகளை தேர்தல் கமிஷன் 3 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனின் விசாரணைக்கு தினகரன் அணியினர் நேற்று அழைக்கப்பட்டனர். விசாரணையில் தினகரன் சார்பில் அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தலைமையில் வக்கீல்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். துணை தேர்தல் கமிஷனர் சந்திரபூஷன் குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை வேறு யாரும் பதிவு செய்திருக்கிறார்களா? என்று துணை தேர்தல் கமிஷனர் கேட்டார். யாரும் பதிவு செய்யவில்லை என்று அங்கிருந்த அதிகாரிகளே கூறினர். எனவே, சின்னமும், கட்சி பெயரும் விரைவில் எங்களுக்கு ஒதுக்கப்படும்’ என்றார்.