

உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் டாக்சி ஓட்டுனர் ஒருவர் நான்கு மாதங்களில் 250 பேரை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி பதிவிடப்பட்டு இருக்கும் இந்த பதிவில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த பதிவையொட்டி சில வலைதளங்களும் செய்தியாக்கி இருக்கின்றன. உண்மையில் இந்த செய்தி வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதை அறியாமல், இந்த தகவல் சமூக வலைதள வாசிகள் மத்தியில் வீண் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் பமெலா கெல்லர் என்பவரும் இந்த பதிவினை தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதனை உண்மையென நினைத்து பல ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.
இணைய தேடல்களில் சரியான வார்த்தைகளை பயன்படுத்தியதில், இந்த சம்பவம் 2007 ஆம் ஆண்டு மீரட் மாவட்டத்தில் நடைபெற்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த செய்தியை தனியார் செய்தி வலைதளம் மார்ச் 2007இல் செய்தியாக பதிவிட்டிருக்கிறது.
2003 ஆம் ஆண்டு முதல் உத்திர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250 பேரை கொலை செய்த வழக்கில் சுமார் 35 பேர் அடங்கிய குழுவினரை மீரட் காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகும் செய்தி மக்கள் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.