பெண் டாக்டர் கற்பழித்து கொலை- சந்திரசேகரராவ் வீட்டு முன்பு திருப்தி தேசாய் போராட்டம்

கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக சேவகரான திருப்தி தேசாய் பெண் டாக்டர் கொலையை கண்டித்து ஐதராபாத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்தி தேசாய்
திருப்தி தேசாய்
Published on

ஐதராபாத்:

ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்பினர், மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த சமூக சேவகரான திருப்தி தேசாய் பெண் டாக்டர் கொலையை கண்டித்து ஐதராபாத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் சந்திர சேகரராவ் வீட்டு முன்பு போராட்டம் நடத்தவும், முதல்வரை சந்திக்கவும் சென்றார். இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது அவர் கூறும் போது, முதல்வர் சந்திரசேகரராவுக்கு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் குடும்பத்தை சந்திக்க நேரம் இல்லை.

நாங்கள் சந்திரசேகரராவிடம் இருந்து தக்க பதிலை எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற கொடூர சம்பவங்களால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். ஆனால், அரசோ இந்த சம்பவத்தை தீவிரமாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து முதல்வர் வீட்டை நோக்கி அத்துமீறி சென்றதாக திருப்தி தேசாயை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருப்தி தேசாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வரை சந்திக்க எந்த அனுமதியும் வாங்கவில்லை.

அவர்கள் முதல்வர் வீட்டு அருகே திரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயன்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்தோம் என்றனர்.

பெண் சமூக சேவகரான திருப்தி தேசாய் சபரிமலை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் கடந்த ஆண்டு கோவிலுக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரச்சனை உருவானது.

சில நாட்களுக்கு முன்பு திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவருடன் வந்த சேவகர் பிந்து மீது மிளகாய் ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்தி தேசாய் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com