ஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன் என்று புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய் கூறினார். #TruptiDesai #Sabarimala
ஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்
Published on

மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படியே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான், மராட்டிய மாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன்.

என்ன எதிர்ப்புகள் வந்தாலும் ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் எனக்கும், என்னுடன் வந்த பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்திதேசாய் பேட்டி பற்றி அறிந்த பக்தர்கள், திருப்திதேசாய் ஐயப்பனை தரிசிக்க வரவில்லை. ஐயப்ப பக்தர்களின் அமைதியை குலைக்க வந்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார்.

அவரை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம். இங்கிருந்து அவர், திரும்பிச் செல்லும் வரை நாமஜெப போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இந்நிலையில் தன்னுடன் வந்த பெண்களுடன் திருப்திதேசாய் காலை சிற்றுண்டி உட்கொண்டார். #TruptiDesai #Sabarimala

X

Maalai Malar
www.maalaimalar.com