

அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நாளிதழ்களின் நிருபர்களை ‘மக்களின் எதிரிகள்’ என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஜொனாத்தன் கார்ல், ‘அதிபர் படிக்காமல் போனாலும், அங்கீகாரம் செய்யாவிட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் வழக்கம்போல் தரமான முறையில் தொடர்ந்து கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன்.
பத்திரிகையாளர்களின் சுதந்திரமான பணியை புறக்கணிப்பதுபோல் பாவனை செய்வதால் அந்த செய்தி மக்களை சென்றடையாமல் இருக்காது’ என குறிப்பிட்டார்.