

அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. அங்கு இ-சிகரெட்டால் ஏற்கனவே 5 பேர் உயிர் இழந்த நிலையில், கான்சாஸ் மாகாணத்தில் இ-சிகரெட் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயதான நபர் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் இ-சிகரெட் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டிரம்பின் மனைவி மெலனியாவும் உடன் இருந்தார்.