மயக்க மருந்து கொடுத்து லாரி கடத்தல் - பிடிபட்டவன் ஜெயிலில் அடைப்பு

சித்தோடு அருகே மயக்கமருந்து கொடுத்து லாரி கடத்தலில் ஈடுபட்டவனை ஜெயிலில் அடைத்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட லாரி
கடத்தப்பட்ட லாரி
Published on

சித்தோடு:

திருப்பூர், பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் சரவணகுமார் மனைவி மஞ்சு (வயது 30) இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம், உலக்கொடி பகுதியில் வசிக்கும் மலைச்சாமி மகன் கார்த்திக் (வயது 28) டிரைவராக ஓட்டி வந்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி மாலை 5 மணிக்கு பல்லடம் மினி லாரி ஸ்டாண்டில் பெருந்துறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி வாடகைக்கு வண்டி வேண்டும் என கார்த்திக்கியிடம் 4 பேர் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் லாரியை ஓட்டி வர 4 பேர் அமர்ந்து கொண்டு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே விராலிமலை மேடு என்ற பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது லாரியை நிறுத்தி கடைக்கு சென்றுள்ளனர்.

இதில், டிரைவருக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை வழங்கியதாக தெரிகிறது. இதனால் கார்த்திக் வாந்தி மற்றும் மயக்கம் வருவதாக கூறிய நிலையில் 4 நபர்களும் உடனே உதவி செய்வது போல் கார்த்தியை லாரியில் ஏற்றி சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் லாரியை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சித்தோடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சித்தோடு அருகில் உள்ள காஞ்சிகோவில் பிரிவு ரோட்டில் அதிகாலை 5.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் ஸ்டே‌ஷன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கோபி, பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகேசன் மகன் பிரசாந்த் (வயது 21) டிரைவரான இவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். மேலும், லாரி கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, பவானி, அரவிந்த் ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரசாந்த் சித்தோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com