

தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்தவர் சொரி முத்து(வயது36). புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (36). சொரிமுத்து லாரி டிரைவராகவும், வள்ளி நாயகம் கிளீனராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்றிரவு இவர்கள் இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வள்ளிநாயகம் வீட்டின் அருகே அமர்ந்து 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சொரிமுத்து அவர்களை கண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கும், மது குடித்து கொண்டிருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து வள்ளிநாயகம் வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கினார். இரவில் வெகுநேரமாகி விட்டதால் சொரிமுத்து தனது வீட்டிற்கு செல்லாமல் வள்ளிநாயகத்தின் வீட்டின் முன் பகுதியில் இருந்த திண்ணையில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் மது குடித்ததை கண்டித்ததால் சொரிமுத்துவுடன் தகராறு செய்த 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தனர். அவர்கள் வள்ளி நாயகம் வீட்டின் முன் படுத்து தூங்கிய சொரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சொரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிகாலை நேரம் என்பதால் கொலை நடந்ததை யாரும் பார்க்கவில்லை. காலையில் விடிந்ததுமே சொரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சொரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி திரு.வி.கே. நகரை சேர்ந்த காளியப்பன்(30), சூசை பாண்டியாபுரம் பீட்டர் (25), சுரேஷ் (27) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தலைமறைவாக இருந்த அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பீட்டர், சுரேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். காளியப்பன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். காளியப்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.