பிரேக் பிடிக்காததால் கீழே குதித்து லாரி சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி பலி

தாம்பரம் அருகே பிரேக் பிடிக்காத லாரியை நிறுத்துவதற்காக சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிரேக் பிடிக்காத லாரி
பிரேக் பிடிக்காத லாரி
Published on

தாம்பரம்:

திருவண்ணாமலை மாவட்டம் வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). லாரி டிரைவர்.

இவர் ராணிப்பேட்டையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை, நாகல் கேனி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை வந்தார்.

நாகல்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வந்த போது லாரியில் பிரேக் பழுதடைந்தது. இதனால் லாரியை நிறுத்த முடியவில்லை.

இதையடுத்து மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்துவதற்காக டிரைவர் முருகன் வண்டியில் இருந்து கீழே குதித்தார். பின்னர் அவர் அருகில் கிடந்த பெரிய கல்லை லாரியின் முன் சக்கரத்தில் போட்டு நிறுத்த முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரம் முருகனின் மீது ஏறி இறங்கியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் இல்லாமல் சென்ற லாரி அதிர்ஷ்டவசமாக யார் மீதும் மோதாமல் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவர் மீது மோதி நின்றது.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com