திரிபுராவில் ஆட்சியை இழந்த மாணிக் சர்க்கார், மனைவியுடன் கட்சி ஆபீசில் குடியேறினார்

திரிபுராவில் முதல்வர் பதவியை இழந்த மாணிக் சர்க்கார் சொந்த வீடு இல்லாததால் மனைவியுடன் குறைந்த அளவே வசதி கொண்ட கட்சி அலுவலகத்தில் குடியேறியுள்ளார்.
திரிபுராவில் ஆட்சியை இழந்த மாணிக் சர்க்கார், மனைவியுடன் கட்சி ஆபீசில் குடியேறினார்
Published on

திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்த மாணிக் சர்க்கார் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

திரிபுராவில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. 1998-ம் ஆண்டு முதல் மாணிக்சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்தார்.

இந்தியாவின் எளிமையான முதல்-மந்திரி என்று அழைக்கப்பட்டவர்தான் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோற்று மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

20 ஆண்டுகள் முதல்- மந்திரி பதவியில் இருந்தாலும் அவருக்கு சொந்த வீடு கிடையாது. தனக்கு கிடைத்த பணத்தை கட்சிக்கு கொடுத்து விட்டார். மனைவியின் வருமானத்தில்தான் அவரது குடும்பம் இருந்தது.

5-வது முறையாக அரியணையில் ஏறும் வாய்ப்பை இழந்த மாணிக் சர்க்கார் முதல்- மந்திரிக்கான வீட்டில் இருந்து வெளியேறினார். சொந்தமாக வீடு இல்லாததால் அவர் மனைவி பாஞ்சாலியுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார்.

உறவினர்கள் வீடு இருந்தும் அவர் அங்கு செல்லாமல் கட்சி அலுவலகத்துக்கு சென்று விட்டார். மேலும் அவர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கூட தங்க விரும்பவில்லை.

மாணிக் சர்க்கார் தற்போது குடியேறிய கட்சி அலுவலகத்தில் குறைந்த அளவு வசதிகளே இருக்கிறது. 2 அறைகளை கொண்ட பகுதியில் அவர் இருக்கிறார்.


இதுகுறித்து திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பஜன்கர் கூறும்போது, “கட்சி அலுவலகம் குறைந்த பட்ச வசதிகளை கொண்டது தான். மாணிக் சர்க்காரின் உறவினர்கள் அகர்தலாவில் உள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்ல விரும்பவில்லை.

தனது பங்களிப்பு கட்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி அலு வலகத்திலேயே தங்கி விட்டார். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் எங்கள் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com