டயானா ஹைடன் குறித்த விமர்சனம் - வருத்தம் தெரிவித்தார் திரிபுரா முதல் மந்திரி

டயானா ஹைடன் குறித்த விமர்சனம் தொடர்பாக எழுந்த கண்டனங்களை அடுத்து, திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேப் வருத்தம் தெரிவித்தார். #BiplabDeb
டயானா ஹைடன் குறித்த விமர்சனம் - வருத்தம் தெரிவித்தார் திரிபுரா முதல் மந்திரி
Published on

அகர்தலா:

திரிபுரா முதல் மந்திரியாக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிப்லப் குமார் தேப். இவர் அகர்தலாவில் கைத்தறி பயிற்சி பட்டறையில் பங்கேற்று பேசுகையில், “சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையை தக்கவைக்க அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன. அதற்காகவே இந்தியாவில் இருந்து 5 பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர். டயானா ஹைடன் கூட உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது” என்றார்.

ஆங்கிலோ இந்தியரான டயானா ஹைடன் 1999-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். டயானா ஹைடன் குறித்த விமர்சனத்துக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபுக்கு டுவிட்டரில் கடும் கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில், டயானா ஹைடன் குறித்த விமர்சனம் தொடர்பாக எழுந்த கண்டனங்களை அடுத்து, திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேப் வருத்தம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, முதல் மந்திரி பிப்லாப் தேப் அகர்தலாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் கதர் துணியின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பட்டறையில் பேசினேன். எனது கருத்து யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பெண்களையும் எனது தாயாராகவே கருதி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பேசவேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BiplabDeb # Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com