திருச்சியில் வாலிபரை எரித்த கொன்ற நண்பர்கள் - போலீசார் விசாரணை

திருச்சியில் வாலிபரை எரித்து கொன்ற 3 நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்சி:

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் தமிழழகன் (வயது 24). இவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு தமிழழகன் வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் தமிழழகனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தமிழழகன் காணாமல் போனது பற்றி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

காணாமல் போன தினத்தன்று தமிழழகன் வீட்டில் உள்ளவர்களிடம், சினிமா பார்க்க செல்வதாக கூறிசென்றுள்ளார். அதன் பிறகு தான்அவர் மாயமாகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழழகன் எங்கு சென்றார்? என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாயமாகி 18 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் திரும்பாததால் உயிரோடு இருக்கிறாரா? அல்லது அவர் இறந்து விட்டாரா? என்பது மர்மமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழழகன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு விட்டதாக போலீசாருக்கு திடுக் தகவல் தெரிய வந்தது. இதனால் போலீசாரும், தமிழழகன் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழழகனை அவரது நண்பர்களே அடித்துகொலை செய்து எரித்துள்ளனர். சம்பவத்தன்று தமிழழகன் அவரது நண்பர்கள் 3 பேருடன் திருச்சி அருகே உள்ள நவல்பட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் தமிழழகனை நண்பர்கள் 3 பேரும் அடித்துள்ளனர். இதில் தமிழழகன் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழழகன் உடலை என்ன செய்வது என்று யோசித்த 3 பேரும் உடலை பொன்மலை தங்கேஸ்வரி நகர் அருகே உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். பெண் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் நவல்பட்டை சேர்ந்த ஆட்டோ ஜெகன், கார்த்திக் என்ற காக்கா கார்த்திக், மணிவண்ணன் ஆகிய 3 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மாயமான வாலிபர் ஒருவர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழழகன் 7-ந்தேதியே கொலை செய்யப்பட்டு எரிககப்பட்டுள்ளார். அவர் எரிக்கப்பட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு அந்த சுடுகாட்டில் மேலும் சில பிணங்கள் உடல் எரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழழகன் எலும்புகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளது.

கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தமிழழகன் தான் என்பதை கோர்ட்டில் போலீசார் நிருபிக்க அவரது எலும்பு, மண்டை ஓடுகள் தேவை என்பதால் போலீசார் சுடுகாட்டில் தேடி எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சுடுகாட்டில் கிடைக்கும் எலும்புகளை கைப்பற்றி டிஎன்ஏ பரிசோதனை செய்து அதன்மூலம் எரிக்கப்பட்டது தமிழழகன் உடல் தான் என்பதை நிரூபிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தமிழழகனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தமிழழகனை அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொன்மலையை சேர்ந்த 2 பேரும், நவல்பட்டை சேர்ந்த ஒருவரும் தமிழழகனின் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று நவல்பட்டிற்கு நண்பர்களுடன் தமிழழகன் சென்றார். அங்கு நண்பரின் வீட்டின் அருகே 4 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் செய்வதறியாமல் அங்கிருந்து அவரது உடலை ஆட்டோவில் எடுத்து சென்று பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர். அதன்பின் ஒன்றும் தெரியாததுபோல் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் கொலையான தமிழழகனின் நண்பர்கள் 3 பேரும் மதுக்கடை பாரில் மது அருந்தும்போது, தமிழழகனை கொலை செய்த சம்பவம் பற்றி போதையில் உளறியுள்ளனர். இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தமிழழகன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com