

தக்கலை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குமரி மாவட்டம் தக்கலையில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த திருச்சி வேலுச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ். சுதந்திர போராட்டத்திற்கு இணையான இன்னொரு போராட்டத்தையும் காங்கிரஸ் கட்சி நடத்தியது. இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தீண்டாமை திணிக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது.
தீண்டாமைக்கு எதிராக ஆலய பிரவேச போராட்டமும் நடத்தப்பட்டது. தீண்டாமை இங்கு உள்ளது என்பதை உலகுக்குக்கு கொண்டு சென்றவர் ரெட்டைமலை சீனிவாசன்.
குமரி மாவட்டத்தில் இருக்கும் மத்திய மந்திரி சினிமா உலகில் நுழைந்திருந்தால் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கும். பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த இருக்கும் தி.மு.க.வும், காங்கிரசும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
காவிரியின் எல்லா போராட்டங்களும் முடிந்து சுப்ரீம் கோர்ட்டின் முழு பெஞ்ச்சிலும் தீர்ப்பு வந்து நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் இருக்கும் அரசு எது? மத்திய அரசு என்பது அவருக்கு தெரியவில்லையா? இதில் காங்கிரஸ் பங்கு எங்கே இருக்கிறது. எனவேதான் உத்தரவை அமல்படுத்தக் கூடிய பொறுப்பில் இருக்கும் மோடிக்கு கருப்புக்கொடி காட்டாமல் வேறு யாருக்கு காட்ட வேண்டும் என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிதானமாக பேசுகிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் சிறிதளவேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.
இந்த நாட்டில் மக்களின் உரிமைக்காக போராடுவோர் லட்சக்கணக்கில் உள்ளனர். வாழ்க்கையை தொலைத்தவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
சினிமாவில் அரிதாரம் பூசிவிட்டால் ஒருவரால் எல்லாம் செய்ய முடியும் என்ற எண்ணம் தமிழகத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பொழுதுபோக்கு. அந்த கோணத்தில்தான் சினிமாவை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.