ஓடும் ரெயிலில் உயிருக்கு போராடிய பெண் பயணி, கணவர் மடியிலேயே உயிரைவிட்ட பரிதாபம்

திருச்சி அருகே ஓடும் ரெயிலில் சுமார் 1 மணி நேரம் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் கணவர் மடியிலேயே இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரெயிலில் உயிருக்கு போராடிய பெண் பயணி, கணவர் மடியிலேயே உயிரைவிட்ட பரிதாபம்
Published on

திருச்சி:

சென்னை வில்லிவாக்கம் பாலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் மணி (வயது76). இவர் ரெயில்வேயில் மெயில் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சாமி கும்பிட சென்றார். அவருடன் அவரது மனைவி ஹேமாவதியும் (வயது73) சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் புறப்பட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

இரவு 11 மணிக்கு ரெயில் மணப்பாறை அருகே வந்தது. அப்போது ஹேமாவதி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஆனால் ரெயிலில் டாக்டர்கள் இல்லாததால் அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியவில்லை. உயிருக்கு போராடியபடியே தவித்த மனைவியை காப்பாற்ற முடியாமல் மணி தவித்தார்.

ஏ.சி. பெட்டி என்பதால் மூச்சு விட ஹேமாவதிக்கு கூடுதல் சிரமமாக இருந்தது. அடுத்து திருச்சி ஜங்சனில் தான் டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் ஹேமாவதி உயிருக்கு போராடுவதை தவிப்புடன் மணியும் மற்ற பயணிகளும் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 45 நிமிட பயணத்துக்கு பிறகு ரெயில் திருச்சி ஜங்சன் வந்தது. அதற்குள் திருச்சி பிளாட்பாரத்தை ரெயில் தொட 10 நிமிடம் முன்பதாக உயிருக்கு போராடிய ஹேமாவதி பரிதாபமாக இறந்தார். தன் கண் எதிரில் மடியிலேயே ஹேமாவதி உயிர் போவதை பார்த்து மணி கதறி அழுதார். திருச்சி ஜங்சனுக்கு ரெயில் வந்ததும், டாக்டர் ஹேமாவதியை பரிசோதித்தார். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தகவலை உறுதி செய்தார்.

உடனே ரெயில் பெட்டியில் இருந்து ஹேமாவதி உடல் இறக்கப்பட்டது. ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் லெட்சுமி மற்றும் போலீசார் ஹேமாவதி உடலை சென்னைக்கு கொண்டு செல்ல மணிக்கு உதவினர். ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு சென்னைக்கு ஹேமாவதி உடல் இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டது. ஓடும் ரெயிலில் இறந்த ஹேமாவதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

ரெயில்களில் டாக்டர் இல்லாததால் இதுபோன்ற உயிர் பலிகள் அதிகம் ஏற்படுகிறது. முன்பு ரெயில்களில் பயணம் செய்யும் டாக்டர் குறித்த விபரம் டிக்கெட் முன்பதிவின்போதே பெறப்பட்டு அவசர நேரத்தில் ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உதவிக்கு பயன்படுத்தப்படுவார்கள். இப்போது டாக்டர்கள் அனைவரும் சொந்த கார், அல்லது விமானத்திலேயே பயணம் செய்கிறார்கள். இதனால் ரெயில் பயணிகள் மருத்துவ உதவிக்கு மாற்று நடவடிக்கை அவசியம் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com