மாணவர் யோகேஷ்குமார்
மாணவர் யோகேஷ்குமார்

திருச்சியில் ரெயில் தண்டவாளத்தில் படுத்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

திருச்சியில் இன்று ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்த பிளஸ்-1 மாணவர் புளூவேல் விளையாட்டில் சிக்கினாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

திருச்சி மேலச்சிந்தாமணி நடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சந்தானம்-ஜெயா தம்பதியரின் மகன் யோகேஷ் குமார் (வயது 16). இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். யோகேஷ்குமார் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அது போல் இன்று காலை அவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே கரூர் பை- பாஸ் சாலை ரெயில்வே மேம்பாலத்தில் செல்லும் போது திடீரென அங்கு சைக்கிளை நிறுத்திய அவர், பாலத்தின் கீழே இறங்கி தண்டவாள பகுதிக்கு சென்றார்.

அப்போது அந்த வழியாக ரெயில் வரும் போது, தண்டவாளத்தில் படுத்து விட்டார். இதில் ரெயில் ஏறி இறங்கியதில் யோகேஷ் குமாரின் உடல் 2 துண்டானது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். மேலும் திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்துகொண்ட யோகேஷ் குமாரின் உடல் தண்டவாளத்தில் துண்டாகி கிடப்பதையும், அவரது தாய் கதறி அழுவதையும் படத்தில் காணலாம்.

பின்னர் துண்டாகி கிடந்த யோகேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், யோகேஷ்குமார் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை.

யோகேஷ் குமாரின் தந்தை சந்தானம் குவைத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஊருக்கு வந்திருந்தார். மேலும் யோகேஷ் குமாரின் விருப்பத்தின் பேரில் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளனர். தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை யோகேஷ் குமார் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யோகேஷ் குமாருக்கு வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது தற்கொலையில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உயிரை பறிக்கும் விளையாட்டான புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com