

திருச்சி:
சமீபத்தில் பெய்த மழையால் திருச்சி மாநகரம் குளிர்ந்து விட்டது. தொடர்ச்சியாக கடந்த 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி பெய்த மழையால் திருச்சி மாநகரின் விஸ்தரிக்கப்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக உருமாறிவிட்டன.
காரணம், அங்கு சரிவர சாலைகள் அமைக்கப்படாமலும், மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி இல்லாததும் ஆகும். திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள அம்மையம்பிள்ளை நகர் விஸ்தரிப்பு பகுதி, சண்முக நகர் கிழக்கு விஸ்தரிப்பு பகுதி ஆகிய இடங்களில் மண்சாலைகூட தெருக்களில் மாயமாகி உள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பகுதி தார்சாலை அமைத்து 10 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், இதனால், தார்சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து அவற்றை மண் மூடி விட்டதாக அங்கு வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்தார். மேலும் தார்சாலை மண் சாலையாக மாறியதுடன் ஆங்காங்கே சாலையில் குழிகள் உருவாகி அதில் மழைநீர் தேங்கியும் நிற்கிறது.
இதுபோல மாநகரில் கிராப்பட்டி காலனியில் உள்ள அருணாச்சலம் நகர் விஸ்தரிப்பு பகுதி, கொட்டப்பட்டு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைவசதி மாநகராட்சியால் இதுவரை செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஸ்மார்ட் சிட்டியாக உருமாறிவரும் திருச்சியில், கட்டிடங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது, மக்கள் வசிக்கும் இடங்களில் சாலை வசதியையும் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.