திருச்சி பெல் வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை வழக்கில் நீடிக்கும் மர்மம்

திருச்சி பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் ரூ.1½ கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட திருச்சி பெல் வங்கி.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட திருச்சி பெல் வங்கி.
Published on

திருச்சி:

திருச்சி பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த வியாழக்கிழமை மாலை ரூ.1 கோடியே 43 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 4 நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வங்கி தொடங்கப்பட்டு 54 வருடங்கள் ஆகிறது. இதுவரை இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றதில்லை. கடந்த 53 வருடங்களாக இந்த கூட்டுறவு சங்க நிர்வாக பொறுப்பை தி.மு.க. வைத்திருந்தது. கடந்த தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தது.

பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 13 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் இந்த பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையம், காட்டூர், சென்னை, திருமயம் என 6 இடங்களில் கிளைகள் உள்ளது.

தலைமை வங்கி அலுவலகம் திருச்சி கைலாசபுரத்தில் செயல்பட்டு வருகிறது. 13 ஆயிரம் கோடி முதலீடு வைத்துள்ள பெல் கூட்டுறவு சங்க வங்கி ஊழியர்களுக்கு ரூ.60 லட்சம் வரை வீடு கட்ட கடன் உள்ளிட்ட திட்டங்களையும் செய்து வருகிறது. இந்தநிலையில் முதல்முறையாக வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொள்ளை எதிரொலியாக ஊழியர்கள் சிலர் டெபாசிட்டை திரும்ப பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்க தனிப்படை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. 6 வங்கி ஊழியர்களிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று திருச்சி வங்கியில் ரூ.1.50 கோடி பணத்தை வங்கி கணக்காளர் 57 வயதான ரவிச்சந்திரன் தனி ஆளாக எடுத்து வந்துள்ளார். அன்று வங்கி லாக்கர் வேலை செய்யாததால் கைலாசபுரத்தில் உள்ள முதன்மை வங்கி மேலாளரை பெல் கூட்டுறவு வங்கி மேலாளர் தொடர்பு கொண்டு பணத்தை எப்படி வைப்பது என்று கேட்டதாகவும், அங்கேயே வைத்து விட்டு மறுநாள் லாக்கரில் வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் தான் வங்கி கணக்காளர் ரவிச்சந்திரன் பணத்தை இருக்கை அருகே மேஜைக்கு கீழே வைத்து விட்டு கடைசி நபராக வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை 9 மணிக்கு வங்கி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தான் சூட்கேசில் இருந்து ரூ.1 கோடியே 43 லட்சம் பணத்தை மர்ம ஆசாமி ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளான்.

பணத்தை ரவிச்சந்திரன் அங்கு வைத்ததை நோட்டமிட்டு 1 மணி நேரத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் அதன் அருகில் உள்ள பகுதியில் வசிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை எங்காவது புதைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் வங்கியில் ரவிச்சந்திரனுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர் வங்கி கட்டிடம் அருகே உள்ள பைக் செட்டில் பணியாற்றும் அவரது கணவர், உறவினர் ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் 2 ஒப்பந்த தொழிலாளர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. வங்கியில் பணம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என்பதை சம்பவத்தன்று மதியம் முதல் பார்வையிட்டு தெரிந்து கொண்ட நபர் தனது உறவினர் அல்லது நண்பர் மூலம் இதை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் 2-ந்தேதி அன்று லலிதா ஜூவல்லரியில் நடந்த முகமூடி கொள்ளையை பற்றி தெரிந்து கொண்ட அந்த ஆசாமி அதைப்போலவே பெல் வங்கியில் முகமூடி, கையுறை, தயாராக பை என காரியத்தை நிறைவேற்றி சென்றுள்ளான்.

பெல் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த சில நாட்களாக தொடர் சர்ச்சை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வங்கியில் ரூ.1 கோடி பணப்பிரச்சனை குறித்து கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பொது மகாசபை கூட்டத்தில் பிரச்சனை எழுந்தது. மீண்டும் இது தொடர்பாக பிரச்சனை எழ இருந்த நிலையில் ரூ.1.5 கோடி கொள்ளை நடந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவத்தால் சில ஊழியர்கள் பயத்தில் டெபாசிட்டை திரும்ப பெற்று வருவதால் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து பணத்தை மீட்டுக்கொடுத்து தனிப்படை போலீசார் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென வங்கி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com