பத்மநாபசாமி கோவில் குளத்தில் கல்மண்டபங்கள் இடிப்பு - திருவிதாங்கூர் ராணி கண்டனம்

பத்மநாபசாமி கோவில் குளத்தில் பழமையான கல் மண்டபங்கள் இடிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது என்று திருவிதாங்கூர் ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்மதீர்த்த குளத்தை ராணி கவுரி லட்சுமிபாய், இளவரசர் ஆதித்யவர்மா பார்வையிட்ட போது எடுத்தபடம்.
பத்மதீர்த்த குளத்தை ராணி கவுரி லட்சுமிபாய், இளவரசர் ஆதித்யவர்மா பார்வையிட்ட போது எடுத்தபடம்.
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் மிகவும் பழமையும், பிரசித்தியும் பெற்றதாகும். இந்த கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் இருந்து தங்கம், வைரம், வைடூரியம் அடங்கிய பொக்கி‌ஷம் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவில் தற்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கோவிலின் சீரமைப்பு பணிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நடந்து வருகிறது. இந்த கோவிலின் கிழக்கு வாசல் முன்பகுதியில் பத்ம தீர்த்த குளம் உள்ளது.

இந்த குளத்தையும் தூர் வாரி சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் குளத்தின் உள்ளே வடக்கு பகுதியில் இருந்த மிகவும் பழமையான 2 கல்மண்டபங்கள் சீரமைப்பு பணியின் போது இடிக்கப்பட்டன.

இதனால் பக்தர்கள் அங்கு திரண்டு சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். கல்மண்டபங்கள் இடிக்கப்பட்டதற்கு பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பழமையான கல்மண்டபங்கள் இடிக்கப்பட்டதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவிதாங்கூர் ராணி கவுரி லட்சுமிபாய், இளவரசர் ஆதித்யவர்மா மற்றும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று பத்மதீர்த்த குளத்திற்கு சென்று கல் மண்டபங்கள் இடிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

இதன்பிறகு ராணி கவுரி லட்சுமிபாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பத்மநாபசாமி கோவில் மிகவும் பழமையானது. இங்கு எந்த செயல் நடைபெற்றாலும் அது ஆச்சார முறைப்படிதான் செய்ய வேண்டும். தற்போது இந்த கோவில் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் பத்மநாபசாமி கோவிலை பொறுத்தவரை தந்திரியின் முடிவுதான் இறுதியானது.

இந்த கோவிலில் எந்த பணி நடைபெற்றாலும் தந்திரியை கலந்து ஆலோசிக்காமல் செய்யக்கூடாது. தற்போது குளம் சீரமைப்பு பணி நடந்தபோது கல் மண்டபங்கள் இடிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இது மிகவும் தவறான செயல். குளத்தின் அழகை இது பெரிதும் பாதித்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் சங்க கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com