பஸ் ஊழியர் 7 நாள் சம்பள பிடித்தம்: தொழிற்சங்கத்தினர் அவசர ஆலோசனை

போக்குவரத்து கழக ஊழியர்களின் 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது தொடர்பாக இன்று போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் பணிமனையில் நடைபெற்றது.
பஸ் ஊழியர் 7 நாள் சம்பள பிடித்தம்: தொழிற்சங்கத்தினர் அவசர ஆலோசனை
Published on

சென்னை:

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்பள உயர்வு நிலுவை தொகை கேட்டு கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்து கழகத்துக்கும் இடையே மத்தியஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை கோர்ட்டு நியமித்தது.

இதைத் தொடர்ந்து 12-ந் தேதி முதல் பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

ஆனால் போராட்டத்தின் போது பணிக்கு வராத தொழிலாளர்களின் 7 நாள் சம்பளம் நேற்று பிடித்தம் செய்யப்பட்டது.

இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் பல்லவன் இல்லத்தில் உள்ள பணிமனையில் இன்று நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் நடராஜன் (தொ.மு.ச.), ஆறுமுக நயினார் (சி.ஐ.டி.யூ.), சுப்பிர மணியபிள்ளை (எச்.எம்.எஸ்.), லட்சுமணன் (ஏ.ஐ. டி.யூ.சி.), முத்துகுமார் (பா.ம.க.), விசுவநாதன் (எம்.எல்.எப்.), திருமலைசாமி (பணியாளர் சங்கம்), அர்ச்சுனன் (ஏ.ஏ.எல்.எப்.), காளிராஜன் (டி.எம்.பி.எல்) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஊழியர்களின் சம்பள பிடித்தம், செட்டில்மெண்ட் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதுபற்றி தொழிற்சங்க பிரதிநிதி சுப்பிரமணிய பிள்ளையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிடித்தம் உள்பட பல்வேறு விசயங்கள் பற்றி போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தர கேட்டோம். ஆனால் அவர் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி பேச நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்த அறிவிப்புக்கு இன்னும் அரசாணை (ஜி.ஓ.) பிறப்பிக்கப்படவில்லை. இது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அனைத்தையும் கவனத்தில் கொண்டு நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறோம். அங்கு நாங்கள் மீண்டும் முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com