

சென்னை:
13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரியும், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரியும் வருகிற 24-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்க்கவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று காலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
அரசு தரப்பில் தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஷ்மின் பேகம், போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 30 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகள் பங்கேற்றனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கியது. போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும் யாஷ்மின் பேகம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், தொழிற்சங்கத்தினரை சமாதானப்படுத்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். இதில் தொழிற்சங்கத்தினர் ஓரளவு சமாதானம் அடைந்ததை தொடர்ந்து கூட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அமைச்சருடனான பேச்சுவார்த்தை தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தாலும், இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. வருகிற 25 அல்லது 26 ஆகிய தேதிகளில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறோம்.
இனி நடக்கவுள்ள பேச்சுவார்த்தை அறிவிப்பை பொறுத்தே, எங்களின் வேலை நிறுத்தம் முடிவு செய்யப்படும். எங்கள் கோரிக்கைகள் ஏற்காத பட்சத்தில் முடிவு செய்தபடி 24-ந் தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.சின்னசாமி கூறுகையில், “ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை குறித்து அமைச்சரிடமும் கூறியுள்ளோம். ஊதிய உயர்வு பிரச்சினையில் ஓரளவு சமரசம் ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த சொல்வது சரியல்ல. படிப்படியாக அது நிறைவேறும்.
இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்து சொல்வோம். மக்கள் பாதிக்காதவாறு நல்ல முடிவுகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அமைச்சருடனான அடுத்து நடைபெற உள்ள பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுபெறும்”, என்றார்.