9 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம்- திருப்பதி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது

9 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம்- திருப்பதி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்:

கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அனைத்து ரெயில்களும் இயக்கப்படாமல் தற்போது குறிப்பிட்ட சில ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் அளிக்கப்படும் தளர்வுகளுக்கேற்ப, ரத்து செய்யப்பட்டிருந்த ரெயில்கள், பயணிகளின் தேவைக்கேற்ப படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க தென்னக ரெயில்வே முடிவு செய்தது. ஏற்கனவே இம்மார்க்கத்தில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்தது. அதன்படி 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் விழுப்புரம்- திருப்பதி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு திருப்பதிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, சித்தூர், பாகாலா, கோட்டாலா, சந்திரகிரி வழியாக திருப்பதிக்கு பகல் 12.20 மணிக்கு சென்றடைந்தது.

இதேபோல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்பட்ட ரெயில் இரவு 8.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. விழுப்புரம்- திருப்பதி இடையே இதுவரை பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும், 9 மாதங்களுக்கு பிறகு இம்மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com