

சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்ட பிறகு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படும்.
அந்த வகையில், நேற்று காலை எழும்பூர் வந்த ரெயில்களின் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக சேத்துப்பட்டு பணிமனையில் நிறுத்திவிட்டு 5 ரெயில் என்ஜின்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரம் அருகே வந்து நின்றது. பின்னர் மாலை 3 மணியளவில் சுத்தம் செய்த ரெயில் பெட்டிகளை எடுப்பதற்காக ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 ரெயில் என்ஜின்களையும், ஒரு ரெயில் என்ஜின் இழுத்து கொண்டு சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக 5 என்ஜின்களை இழுத்து சென்ற என்ஜின் தடம் புரண்டது. இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயில் என்ஜினை நிறுத்திவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்து மீட்பு வாகனத்தின் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தடம் புரண்ட என்ஜினை ரெயில்வே ஊழியர்கள் மீட்டனர். பின்னர் தண்டவாளத்தை சீர் செய்யும் எந்திரத்தின் மூலம் விபத்து நடந்த தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.