குன்னூர் - ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்கம் இன்று சோதனை ஓட்டம்

குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சோதனை ஓட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட ரெயில் பஸ்.
சோதனை ஓட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட ரெயில் பஸ்.
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 200 பயணிகள் பயணம் செய்யலாம். இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் வழியாக இந்த மலை ரெயில் செல்வதால் இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரெயில் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் - ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்க சேலம் ரெயில்வே கோட்டம் தீர்மானித்தது. இதற்காக மேற்கு ரெயில்வேயில் அகமதாபாத்- குஜராத் இடையே இயக்கப்பட்டு வந்த ரெயில் பஸ் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது.

இந்த ரெயில் பஸ் 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 60 பேர் இதில் பயணம் செய்யலாம். 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இந்த ரெயில் பஸ் சோதனை ஓட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் பாதை வரை முதலில் 4,5 முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த ரெயில் பஸ்சில் 2 என்ஜின்கள் உள்ளது. இரு பக்கமும் டிரைவர்கள் உட்கார்ந்து இந்த ரெயிலை பஸ்சை இயக்கலாம். சோதனை ஓட்டத்தில் சேலம் ரெயில்வே டிவி‌ஷன் சீனியர் மெக்கானிக்கல் என்ஜீனியர் முகுந்தன், சீனியர் டிவி‌ஷனல் எலக்ட்ரானிக் என்ஜீனியர் அரவிந்தன், மேட்டுப்பாளையம் கோச் பொறியாளர் முகமது அஸ்ரப், குன்னூர் ரெயில்வே மேலாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் இந்த ரெயில் பஸ் திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு புதிய தொழில் நுட்பத்துடன் கண்ணை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com