டிடிஹெச் சேவைக்கு முன் கூட்டியே பணம் கட்டியவர்கள் நிலை என்ன? - டிராய் புதிய உத்தரவு

விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டிவி சேவை, திட்டமிட்டபடி நாளை அமலுக்கு வருகிறது. டிடிஹெச்சில் நீண்ட கால சேவைக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்கள் நிலை குறித்து டிராய் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.#TRAI #Channel
டிடிஹெச் சேவைக்கு முன் கூட்டியே பணம் கட்டியவர்கள் நிலை என்ன? - டிராய் புதிய உத்தரவு
Published on

புதுடெல்லி:

டி.டி.ஹெச். சேவையிலும், கேபிள் டி.வி. சேவையிலும் நாம் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் செலுத்தும் புதிய முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்தது.

கடந்த மாத இறுதியிலேயே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இத்திட்டம் பிப்ரவரி 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த புதிய நடைமுறை, நாளை (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி அமலுக்கு வருகிறது. இத்தகவலை ‘டிராய்’ அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா நேற்று தெரிவித்தார்.

டி.டி.ஹெச். நிறுவனங்களில் 6 மாதம், ஒரு வருடம் என நீண்ட கால ‘பேக்’குகள் உள்ளன. அவற்றுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களின் நிலை என்ன ஆகும் என்பது பற்றியும் ஆர்.எஸ்.சர்மா விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

புதிய நடைமுறை, திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ந் தேதி அமலுக்கு வரும். அதில் மாற்றம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அசவுகரியமும் இல்லாமல், சுமுகமாக இந்த நடைமுறை மாற்றம் நடந்தேறும் என்று நம்புகிறேன்.

டி.டி.ஹெச். சேவையில் நீண்ட கால ‘பேக்’குகளை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு அவர்களது பணத்துக்கான உத்தரவாதத்தை டி.டி.ஹெச். நிறுவனங்கள் மதித்து நடக்க வேண்டும்.

அவர்கள் பழைய முறையிலேயே நீடிக்க விரும்பினால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள், விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால், அதற்குரிய பணத்தை மட்டும் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து முறையாக கழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #TRAI #Channel

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com