வியாபார சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்: வணிகர்கள் கூட்டமைப்பு மனு

புதுவையில் நிலவும் வியாபார சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு புதிதாக வரிகளை உயர்த்துவதை அரசு கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வணிகர்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
வியாபார சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரி உயர்வை அரசு கைவிட வேண்டும்: வணிகர்கள் கூட்டமைப்பு மனு
Published on

புதுச்சேரி:

புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் பாலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாடெங்கும் பருவ மழை தவறியதால் ஏற்பட்ட வறட்சி, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள வியாபார மந்த சூழ்நிலை மாறுவதற்குள் புதுவை அரசு சென்ற ஆண்டு சொத்து வரி, குடிநீர் வரியினை உயர்த்தியது. இது பொது மக்கள், வியாபாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதுவையில் உள்ள வியாபார சூழ்நிலையை கணக்கில் கொண்டு உயர்த்தப்பட்டுள்ள வரியினை கைவிடுவது அவசியம்.

சொத்து வரி உயர்வால் புதிதாக வாடகைக்கு வருபவர்கள் வாடகையை குறைத்தால் மட்டும் வருகின்றனர். கட்டிடங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

எனவே உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியினை குறைப்பது அவசியம், சொத்து வரியினை மதிப்பீடு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கொண்ட கமிட்டியினை அரசு அமைத்து, புதிதாக வரியினை முடிவு செய்ய வேண்டும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்த பிறகு வருடந்தோறும் மின்சார வரி உயர்த்துவது வாடிக்கையாகி விட்டது. வருடா வருடம் மின்சார வரியினை உயர்த்தாமல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்துவது என கொள்கை முடிவினை எடுக்க வேண்டும்.

வியாபார சூழ்நிலை மிக மந்தமாக உள்ள நிலையில் பல மடங்கு தொழில் வரியினை உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நகராட்சிகள் பணம் மட்டுமே பெறுகின்றனர். சான்றிதழ் வழங்குவதில்லை. மீண்டும் வசூல் நடத்துகின்றனர். சான்றிதழ் வழங்குவதில் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயம் அவசியம்.

மேலும் நகராட்சி, கொம்யூனுக்கு சொந்தமான இடங்களில் இயங்கும் மார்கெட், சந்தைகளில் உள்ள கடைகளுக்கு தொழில் வரி சான்றிதழ் வழங்குவதில் புதிய வழிகாட்டு முறைகளை அரசு கொண்டு வரவேண்டும்.

புதுவை அரசு வீடுகள், கடைகளுக்கு குப்பை வார புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இந்த வரி மிக அதிகமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடம் இருக்கும் போது, மாநில அரசு அதனை பெற்று இங்கு தூய்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதை விடுத்து இங்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் வசூல் செய்வது தேவையற்ற நடவடிக்கையாகும்.

ஆகவே புதுவை முதல்- அமைச்சர் புதுவையில் நிலவும் வியாபார சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு புதிதாக வரிகளை உயர்த்துவதை கைவிட வேண்டுகிறோம். மேலும் சென்ற ஆண்டு உயர்த்திய சொத்து வரி, குடிநீர் வரி மிக அதிக அளவில் உள்ளதை பல்வேறு அமைப்பினர், ஆரம்பம் முதலே எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். எனவே அவ்வரி உயர்வினை கை விடுவது அவசியம்.

முதல்-அமைச்சர் இப்பிரச்சினைகளில் உள்ள தீவிரத்தை பரிசீலித்து நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com