முத்துப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பிளஸ்-2 மாணவர் பலி

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முத்துப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பிளஸ்-2 மாணவர் பலி
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம், தொல்லியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி பல மாதங்களாக மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்நிலையில் கீழவாடியல்காடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் கஜேந்திரன் என்பவர் நேற்று நள்ளிரவு தனக்கு சொந்தமான டிராக்டரில் தொல்லியக்காடு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தார்.

அவருடன் கீழவாடியக் காடு பகுதியை சேர்ந்த முத்துப்பேட்டை மணிவாசகம் மகன் பிரவீன் (வயது 17) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தீபன் (17), ஆகிய இருவரும் மணல் அள்ள சென்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

ஆற்றில் மணல் அள்ளிவிட்டு டிராக்டரில் 3 பேரும் திரும்பி கொண்டிருந்தனர். மேலதொண்டியக்காடு என்ற பகுதியில் ஒரு வளைவில் டிராக்டர் வந்தபோது டிரைவர் கஜேந்திரன் பிரேக் பிடித்துள்ளார். அப்போது டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரின் மேல் அமர்ந்து வந்த மாணவர்கள் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். கால் முறிந்து காயம் அடைந்த தீபனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான பிரவீன் உடலை மீட்டு நேற்று திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தலைமறைவான டிரைவர் கஜேந்திரனை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com